சுபாவத்தில் மாற்றம் ( Shift in Nature )
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் ,இங்கிலாந்து நாட்டில் உலகப்புகழ் பெற்ற ஒரு தத்துவ ஞானி வாழ்ந்து வந்தார் . அவர் உதிர்த்த தத்துவ மொழிகள் இன்றும் உலகமெங்கும் அநேகரால் எடுத்தாளப்பட்டு பயன் படுத்தப்படுகின்றன . அவரை , ஒருநாள் ஒரு பத்திரிகை நிருபர் இவ்வாறு கேட்டார் , '' அய்யா , நீங்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் செய்தித்தாளில் முதன் முதலில் விரும்பி படிக்கும் பகுதி எது ? '' என்று . அவர் சொன்னார் , '' நான் விரும்பிப் பார்க்கும் பகுதி Obituary பகுதி தான் ( இறந்து போனவர்கள் விபரங்கள் கொண்டது ). ஏனெனில் , எனக்கு பிடிக்காதவர்கள் , என்னை எதிர்ப்பவர்கள் யாரேனும் இறந்திருந்தால் என் உள்ளம் மகிழும் ..அந்த நாள் முழுவதும் உற்சாகத்தோடு இருப்பேன் '' என்றார் .
அவர் பெரிய கல்விமான் , தத்துவ மேதை மற்றும் ஞானி ....இருப்பினும் அவர் சுபாவம் ( nature ) கேவலமாக இருந்தது .
ஆனால் , பழைய ஏற்பாட்டின் நாட்களில் வாழ்ந்த தாவீது மாறுபட்டவனாக , வித்தியாசமானவனாக வாழ்ந்தான் . எப்படி என்பதை விளக்குவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம் . சவுல் , தாவீதை 2 1 முறை கொலை செய்ய முயற்சி செய்தான் . தாவீதிற்கு உதவி செய்த 85 ஆசாரியர்களை கூட கொன்று போட்டான் . இருப்பினும் சவுல் இறந்து போனான் என்று கேள்விப்பட்டபோதோ தாவீது துடித்து போய்விட்டான் , வருத்தத்தோடு உபவாசம் இருந்தான் ( 2 சாமு 1 / 1 1 ) .சவுல் இறந்த கில்போவா மலைகளை சபித்தான் ( 2 சாமு 1 /2 1 ) . மரண செய்தியை கொண்டுவந்தவன் ,தாவீது மகிழ்ச்சி அடைவான் என்று எதிர்பார்த்தான் .( 2 சாமு 4/10 ) மாறாக , தாவீது மனம் உடைந்து போனான் . அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கு இந்த நிலையா என்று புலம்பினான் . இயற்கையாகவே இந்த உணர்வு அவனிடம் இருந்து வெளிப்பட்டது . அவன் வருந்துவது போல நடிக்கவில்லை .
சவுலின் மகன் இஸ்போசேத் கொலை செய்யப்பட்டபோதும் , ஒரு '' நீதிமானை '' இழந்து விட்டேனே என்று அங்கலாய்த்தான் .( 2 சாமு 4/11 ) .
இங்கு தாவீதிடம் , உலகத்தார் மத்தியில் யதார்த்தமாக காணப்படுகிற சுபாவத்தைவிட ( nature ), ஒரு வித்தியாசமான சுபாவத்தை ( shift in nature) காணமுடிகிறது . இந்த சுபாவம் தொடர்ந்து நீடிக்கிறது ( He is consistent..). கர்த்தரோடு உள்ள ஐக்கியம் , அபிஷேகம் , வார்த்தையின் மேல் உள்ள வாஞ்சை , ஆவியானவரின் இடைபடுதல் போன்றவை அவன் சுபாவத்தை தலை கீழாக மாற்றியது . எனவே தான் இயேசு , தாவீதை என் இருதயதிற்கேற்றவன் என்றார் ... ( அப் 1 3 / 2 2 )
எவ்வளவோ ஆண்டுகள் வேதத்தை படித்து தியானம் செய்கிறோம் ...ஊழியம் செய்கிறோம் . இப்பேர்ப்பட்ட மாற்றம் நம்மில் ஏற்பட்டிருக்கிறதா ? Atleast அதற்காக வாஞ்சித்திருக்கிறோமா ? சுபாவ மாற்றமே கிறிஸ்த வாழ்வின் முதல் படி . உலகத்தார் எப்படியும் வாழ்வார்கள் ...நாமோ வித்தியாசமாக வாழ அழைக்கப்பட்டு இருக்கிறோம் . இது போன்ற சுபாவ மாற்றத்திற்காக ஜெபிப்போம் ...

No comments:
Post a Comment